மரபு மிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் 1979-ம் ஆண்டு தொடங்கி பொன்விழாவை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது. வாசிங்டன் பகுதி வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த நீண்ட நெடிய தமிழ் சங்கத்தின் பயணம் என்பது, கடந்த காலங்களில் பல தமிழ் தன்னார்வலர்கள், இரவு பகல் பாராது தங்கள் நேரத்தையும், சிந்தனையையும் அளித்து திறம்பட வளர்த்து வந்ததன் வெளிப்பாடாகும். அந்த நிர்வாகிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் இந்த நேரத்தில் நாம் மனதார நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக ஓரே அமைப்பாக நமது இருப்பை உணர்த்திக் கொண்டே இருப்பது முக்கியம். ஒவ்வொரு வெளிநாடு வாழ் தமிழரும் அருகில் உள்ள தமிழ் சங்கங்களில் இணைந்து அந்த அமைப்புகளை வலிமை உள்ளதாக ஆக்குவது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் தமிழ்நாட்டில் இல்லாத குறையைப் போக்கிக்கொள்ள சித்திரைத் திருவிழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் தினவிழா, பொங்கல் விழா, தமிழ் இசை விழா போன்ற பல விழாக்களை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறோம். இவைகளைத் தாண்டி, வாசிங்டன் வட்டாரத்திற்கு வரும் பல சிறப்பு விருந்தினர்களை, எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை கவுரவப்படுத்தி பல கலந்துரையாடல் நிகழ்வுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். நம் குழந்தைகள் நன்கு தமிழ் கற்று, நம் மொழியின் அருமையை உணர்ந்துகொள்ளும் நோக்கில் நம் பகுதியில் நடத்தப்படும் தமிழ் பள்ளிகளுக்கு தமிழ்சங்கம் ஊக்கமும், உற்சாகமும் அளிக்கிறது. வெள்ளிவிழா கண்டு , பொன்விழாவை நோக்கி வீறுநடை போடும் நம் தமிழ்ச்சங்கப் பகுதியில் “வாசிங்டன் வட்டாரத் தமிழ் மையம்” அமைத்தல் நம் நீண்டநாளைய குறிக்கோள். வாசிங்டன், மேரிலாந்து மற்றும் வெர்ஜினியா பகுதியில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஒரு அமைப்பின் பலம் அதன் உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டே அளவிடப்படும். அந்த வகையில் நமது தமிழ்ச் சங்கத்தின் தொடர்ச்சிக்கும், வளர்ச்சிக்குமான மூலைக்கல்லாக இருந்து பேருதவி புரிவது நீங்கள் செலுத்தும் உறுப்பினர் கட்டணமே. இந்தப் பணத்தைக் கொண்டுதான் நாம் விழா நடத்துவதற்குத் தேவையான அரங்கம், ஒலி ஒளிக் கருவிகள், பரிசுகள், விருந்தினர் செலவுகள் ஆகியவற்றைச் செய்துவருகிறோம்.
இதற்குப் பிரதிபலனாக உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் நமது பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு இலவச அனுமதியை வழங்குகிறோம். நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வ காலாண்டு இதழான ‘தென்றல் முல்லை’ இதழினை இலவசமாக வழங்குகிறோம். கட்டணம் செலுத்திய உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கான உரிமையையும் பெறுகிறார்கள். எனவே தயவுசெய்து உறுப்பினர் கட்டணத்தைச் செலுத்தி தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
Click here to see our upcoming events
தென்றல் முல்லை இதழ்களை படிக்க இங்கே சொடுக்கவும்
