வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள் பற்பல.
சித்திரை விழாவுக்காக உழைத்த அனைத்து தன்னார்வலர்களையும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மனதார பாராட்டுகிறது.
மஞ்சள் நீர் விளையாட்டுடன், குதூகலத்துடனும் சிறப்பாக ஆரம்பித்து, நல்ல பல கலை நிகழ்ச்சிகளுடன் சித்திரைத் திருவிழா களைகட்டியது. 250க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை கொடுத்து சிறப்பித்தார்கள். நம் உள்ளூர் பிள்ளைகள் வெகு அருமையாக தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
கிட்டத்தட்ட 100 முளைப்பாரிகள் வளர்த்து வந்த அனைவருக்கும் நன்றிகள். முளைப்பாரி ஊர்வலம், பலவகை தமிழ் இசைக்கருவிகளுடன் நடைபெற்றது. திருமதி. அனிதா குப்புசாமி அவர்கள் கும்மிப்பாட்டு பாட அனைவரும் மேடைக்கு வந்து கும்மி அடித்து கொண்டாடியது மிக சிறப்பு.
மருத்துவர் வி. சொக்கலிங்கம் அவர்கள் ஆற்றிய நலமுடன் & வளமுடன் வாழ – இருதயம் பேணிக் காப்பது பற்றிய நகைச்சுவை கலந்த சிறப்பு சொற்பொழிவு வரவேற்பைப்பெற்றது.
பின்னர், கலைமாமணி முனைவர் திரு. புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் வழங்கிய இனிய மக்களிசை நிகழ்ச்சி மக்கள் மனத்தைக் கவர்ந்தது.
நாள்முழுவதும் பல்வேறு , தமிழ் இசைக் கருவிகள் , சிறப்பு பேச்சாளர்கள், விருந்தினர்கள், இன்னிசை நிகழ்ச்சி என மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற மக்கள் விழா என்றென்றும் நம் தமிழர் ஒற்றுமையை பறைசாற்றும் விழாவாக அமைந்தது.
இது உங்களால் சாத்தியமானது. இது நமது தமிழ்ச்சங்கம்! நாம் அனைவரும் அதன் அங்கம்!!
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை!!
தங்களின் அன்புள்ள, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க செயற்குழு