இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல். முதன் முதலாக, 1812 -ஆம் ஆண்டு பிரான்சிஸ் வொயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) அவர்களின் முயற்சியால் திருக்குறள் அச்சிடப்பட்டது. கடந்த 200 ஆண்டுகளில் திருக்குறளுக்குத் தமிழில் பல உரைகள் பலரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை 37 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் திருக்குறளுக்கு 55 க்கும் மேலான மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. உரைகளும் மொழிபெயர்ப்புகளும் இருந்தாலும், தமிழகத்துக்கு அப்பால் திருக்குறளைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் வெகு சிலரே. பள்ளி நாட்களில் திருக்குறளைப் படித்திருந்தாலும், எல்லாக் குறளையும் நாம் படித்திருப்போமா எனக் கேட்கின் ‘இல்லையே’ என்றுதான் பதில் அளிக்க இயலும்.  படித்த குறட்பாக்களுக்கு, வள்ளுவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாக அறிந்தோமா என்றால் அதுவும் இல்லை.  இவையிரண்டும் இல்லாத போது, அக்கருத்துக்களை நாம் வாழ்க்கையில் பின்பற்றுவதும் இயலாத, செயலாத ஒன்றுதானே! 

இது இவ்வாறிருக்க, புலம் பெயர்ந்த அமெரிக்கச் சூழ்நிலையில் நம் மாணவச் செல்வங்கள், திருக்குறளை எவ்வளவு தூரம் உள்வாங்கி உள்ளனர் என அறியும் பொருட்டு அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி  மாணவர்களுக்காக  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் ஆகிய அமைப்புகளால் ஒரு திருக்குறள் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.  அந்தப் போட்டியில் அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும்  42 மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அந்தப் போட்டிக்கு மாணவர்கள் தங்கள் கட்டுரைகளைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப 17 மாணவர்கள் தங்கள் கட்டுரைகளைத் தமிழிலும், 25 மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் எழுதி அனுப்பினார்கள்.

பெறப்பட்ட கட்டுரைகள் குறித்த வரைபடம் கீழே:

Thirukkural Essays Received Analysis – Year 2021

ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்தல்:

பெறப்பட்ட கட்டுரைகளிலிருந்து, சிறந்த முதல் பத்து கட்டுரைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு,  முனைவர் கலைச்செழியன் (சென்னை, தமிழ்நாடு), முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (ஆம்ஸ்ட்ர்டாம், நெதர்லாந்து) மற்றும் முனைவர் திருமதி சித்ரா மகேஷ் (டல்லஸ், டெக்சாஸ் அமெரிக்கா) ஆகியோர்  கட்டுரைகள் அனைத்தையும் படித்துத் தேர்ந்தெடுத்தார்கள். அடுத்து, அந்தப் பத்துக் கட்டுரைகளை  எழுதிய மாணவ, மாணவிகளை  திரு. மணி மணிவண்ணன் (கலிபோர்னியா), திரு. இளங்கோவன் தங்கவேலு (மிசௌரி) மற்றும் திருமதி மேகலா இராமமூர்த்தி ஆகிய மூன்று நடுவர்களும் நேர்காணல் செய்தார்கள். அந்த நேர்காணலின் பொழுது, ஒவ்வொரு மாணாக்கரும் தங்கள் கட்டுரையில் உள்ள கருத்துக்களை ஐந்து மணித்துளிகள் அளவில் சிற்றுரை ஆற்றினார்கள். அதன் பின்னர், திருக்குறளைப் பற்றி சில பொதுவான கேள்விகளும், அவர்களின் கட்டுரையைப் பற்றிப் பல  நுணுக்கமான கேள்விகளும் கேட்கப்பட்டன. முதற்கட்டத் தேர்வு, சொற்பொழிவு, நேர்காணல் ஆகிய அனைத்திலும் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பரிசுகளுக்குத் தகுதியான கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பரிசு பெற்ற  ஆக்கங்களும், கட்டுரையாளர்கள் குறித்த செய்திகளும்  கீழ்க்கண்டவாறு;

எண்பெயர்தலைப்புமாநிலம்தகுதி
E003அத்விகா சச்சிதானந்தன்வள்ளுவரின் பார்வையில் வறுமையும், வறுமை ஒழிப்பும்மிசெளரி1
E037அவ்வை சந்திரசேகரன்Humanism in Thirukkuralஅட்லா ண்டா2
E018ஆர்த்தி பாலாஜிWhat are the Benefits of Studying Thirukkural?இல்லினாய்3
2021 Winners List

சிறந்த கட்டுரைகளை எழுதிய மாணவச் செல்வங்களுக்கு முதல் பரிசாக 1000 வெள்ளிகளும், இரண்டாம் பரிசாக 500 வெள்ளிகளும், மூன்றாம் பரிசாக 250 வெள்ளிகளும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இப் போட்டியானது, அந்நிய மொழிச்சூழலில் வாழும் மாணவச் செல்வங்களுக்குத் திருக்குறளின் மீதான ஈர்ப்பை  அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.  மேலும், இப்போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறும் எனப் பகிர்வதில் பெருமகிழ்வு.

Kural Wissay Winners Announcement – Muthamizh Vizha 2021